செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (17:01 IST)

வாஸ்து : வருமானம் தரும் வடக்கு ஜன்னல்

ஒரு வீட்டின் வடக்குத் திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும் ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று குறிப்பிடுகிறோம். 

 
வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு காம்பவுண்டும் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல் பூரண சிறப்பைத் தருகிறது.  
 
வடக்குத் திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன் எனப்து ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம் விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும் காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள்.  
 
குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன என பழம்பெரும் நூல்கள் கூறுகின்றன. இவைகளில் சங்கமும், பத்மமும்தான் முதல்நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு.  
 
குட்டையான பூதவடிவில் தாமரை மலர் மீது சங்கை வலது கரத்தில் பிடித்திருப்பவர் சங்கநிதி. வலது கையில் தாமரையைப் பிடித்திருப்பவர் பத்மநிதி. நமது கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும், வலப்புறத்தில் சங்க நிதியையும் காணலாம். தஞ்சை பெரிய கோவிலில் நுழைவாயிலின் இருபுறமும் இடம் பெற்றிருக்கும் இக்கோடீசுவர பூதங்களை பக்தர்கள் கவனித்திருக்கக் கூடும்.  
 
தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில் கோபுரங்களில் ஈசானிய மூலையிலிருந்து வாயு மூலைக்குள் வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் இடம் பெறுவது வழக்கம்.  
 
நமது வீடுகளில் கூட இந்தக் குபேரனை தரிசனம் செய்வதற்காகத்தான் நமது பணப்பெட்டிகள் நைருதி மூலையில் வடக்கைப் பார்த்தவாறு வைக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  
 
வடக்கு என்பது மேலே, தெற்கு என்பது கீழே.  
 
ஒரு ஆரஞ்சுப் பழத்தின் மீது சொருகப்பட்ட குண்டுசீயைப்போல நாம் பூமி மீது நின்று கொண்டிருக்கிறோம். ஆரஞ்சின் மேல்புறம் வடதுருவம், அடிப்புறம் தென் துருவம் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும்.  
 
வடக்குத் திசை நமது இடது தோளைக் குறிக்கிறது. வலக்கையை தலைக்கு வைத்து ஒருக்களித்துப் படுத்திருப்பவரின் இடது தோளில் யாராவது ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அவரால் நிம்மதியாக தூங்க முடியுமா? தூங்கி எழுந்து கடமைகளை செவ்வனே ஆற்ற முடியுமா? நாம் வசிக்கும் வீடும் நம்மைப் போன்றதுதான். அவ்வீட்டின் இடப்புறமான வடபாகத்தில் பொதுச்சுவர் இருக்கக்கூடாது. இருந்தால் தோளின் மீது பாரம் ஏற்றிய மாதிரி பக்கத்து வீட்டை நமது வீடு சுமந்து கொண்டிருப்பதாக அர்த்தம்.  
 
 இது கிழக்கு, மேற்கு, தெற்கு என எல்லா திசை வீடுகளுக்கும் பொருந்தும்.  
 
ஒரு வீட்டின் வாயில்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாலைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திசைகள் நிலையானவை என்பதால், ஒரு வீட்டின் வடக்குத் திசையில், சூரிய வெளிச்சம் நிலத்தில் படுமாறு திறந்தவெளியாக இருப்பது மிக மிக அவசியம். வடக்குச் சுவற்றில் ஒரு ஜன்னலேனும் இருந்து அதை பகலில் திறந்து வைப்பது அதைவிட அவசியம். 
 
இது குடும்பத் தலைவரின் வருமானத்தை சீராக வைத்திருக்கும் என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.