ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 4 ஜூலை 2014 (18:10 IST)

டப்பாவாலா - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வீடியோ காட்சி

டப்பாவாலா - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வீடியோ காட்சி
உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்கள் மூலம் இன்னொரு புதிய யோசனை, சத்தமில்லாமல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர்.
 
டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று, அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி, காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள். 

 
டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆண்களே. இருசக்கர வாகனம், நடை, இரயில் என்று பல்வேறு வழிகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது எஸ்.எம்.எஸ் என்று அறியப்படும் குறுஞ்செய்தி நுட்பத்தையும் தங்கள் தொழிலில் இவர்கள் பின்பற்றுகின்றனர். 
 
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்தியா வந்திருந்த போது டப்பாவாலாக்களைச் சந்தித்தார். பிபிசி நிறுவனம் டப்பாவாலாக்கள் குறித்த ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகம், இவர்களைக் குறித்து ஆராய்ந்தது. போர்ப்ஸ் நிறுவனம், இவர்களின் செயல்பாட்டு, சிக்ஸ் சிக்மா என்ற சிறந்த தொழில்முறையில் அமைந்துள்ளதாகச் சான்றளித்துள்ளது. மும்பை டப்பாவாலா சங்க தலைமைச் செயல் அதிகாரி பவன் கிரிதர்லால் அகர்வால், கொல்கத்தா ஐஐஎம் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சிறப்பு வகுப்பு நடத்தினார்.
 
இத்தகைய சிறப்பு மிக்க டப்பாவாலா சேவையை மும்பையில் சுமார் 16 இலட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதே மும்பையில் சுமார் சாலையோரங்களில் வசிக்கும் 2 இலட்சம் சிறுவர்கள் பசியால் வாடுகின்றனர். இவர்களுக்கு எப்படி உணவளிப்பது? 
 
அதே நேரம், இந்த டப்பாக்களில் நாள்தோறும் 120 டன் உணவுப் பொருள் எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றில் 16 டன் உணவு, வீணடிக்கப்படுகிறது. இந்த உணவை எப்படி ஏழைச் சிறுவர்களுக்கு எடுத்துச் செல்வது?
 
இதற்கு ஒரு குழுவினர், புதுமையான யோசனையை முன்வைத்துள்ளனர். இதன்படி, இந்த டப்பாவில் உணவைப் பெறுபவர்கள், தாம் சாப்பிட்டது போல் மீதம் உணவு இருந்தால், அந்த டப்பாவின் மீது, ஷேர் மை டப்பா என்ற ஸ்டிக்கரை ஒட்டுகின்றனர். அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டப்பாக்களை மட்டும் பிரித்து, அதில் உள்ள உணவை வீதியோரச் சிறுவர்களுக்கு டப்பாவாலாக்களும் தன்னார்வலர்களும் பகிர்கின்றனர். இதன் மூலம் உணவு வீணாவது தவிர்க்கப்படுவதுடன், பசியால் வாடும் சிறுவர்களுக்கு உணவும் கிடைத்துவிடுகிறது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர்.
 
ஒரு யோசனை போதும், இந்த உலகத்தின் சிக்கலைத் தீர்க்க. அப்படிப்பட்ட ஒரு நல்ல யோசனையை இந்த வீடியோவில் பாருங்கள்.