குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்....!
உருளைக் கிழங்கைத் தோல் சீவி, உப்புத் தண்ணீரில் ஊரவைத்து உலர்த்தி எண்ணெய்யில் வறுத்தெடுத்தால் வறுவல் மொறுமொறுவென இருக்கும்.
இட்லி அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல இருக்கும்.
பிரெட் காய்ந்து விட்டால் அதைத் தூக்கி போடாமல் தண்ணீரில் நனைத்து மாவாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் கடலைமாவு, ஒரு சிட்டிகை உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பிரெட் மாவில் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் பக்கோடா ரெடி.
உளுந்து வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்துவிட்டால் சிறிது அவலை மாவாக அரைத்துக் கலந்துவிட்டால் போதும்.
பூரி உப்பிக் கொண்டு வருவதற்கு மாவு பிசையும் போதே கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், 1 டீஸ்பூன் ரவையும் கலந்து பிசையுங்கள். 1/2 டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டால் உப்பி வந்த பூரி அமுங்காமல் அப்படியே இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
புதினா, மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் அரைக்கும்போது அவற்றுடன் மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
பஜ்ஜிக்கு மாவு கரைக்கும்போது சிறிது பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக் கொண்டால், மேலே கரகரப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.