நிறைவு பெற்றது தாமிரபரணி புஷ்கரம் விழா: 20 லட்சம் பேர் புனித நீராடி சாதனை
144 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் ஆரம்பித்த மகா புஷ்கரம் விழா இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த விழாவில் தாமிரபரணி ஆற்றில் சுமார் 20 லட்சம் பேர் நீராடியதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்த இந்த புனித விழாவில் பங்கேற்று தாமிரபரணி ஆற்றில் குளித்து பாவங்களை போக்க தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் 12 லட்சம் பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 லட்சம் பேரும் என மொத்தம் 20 லட்சம் பேர் நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டடஅலும், ஆதினம் தரப்பில் இருந்து சுமார் 40 லட்சம் மக்கள் நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இறுதி நாளில் நெல்லை தைப்பூச படித்துறையில் தீப ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.