வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: சனி, 21 மே 2016 (12:30 IST)

தேமுதிகவின் அங்கீகாரத்தை பறித்த தேர்தல் கமிஷன் : முரசு சின்னமும் பறிபோனது

தேமுதிகவின் அங்கீகாரம் பறிபோனது

நடந்து முடிந்த தேர்தலில், தேமுதிக படுதோல்வி அடைந்ததால், அந்த கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. இதனல் முரசு சின்னமும் அக்கட்சியிடமிருந்து பறிபோனது.


 

 
2006-இல் முதல் முறையாக தேர்தலை சந்தித்த தேமுதிக 10 சதவீத வாக்குகளை பெற்று அனைவரையும் வியக்க வைத்தது. மீண்டும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை பெற்றது.
 
இதனால் தமிழக அரசியலில் விஜயகாந்தின் மவுசு கூடியது. 2011 சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுக்க போட்டி போட்டது. கடைசியில் அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக 7.8 சதவீத வாக்குகளுடன் 29 எம்.எல்.ஏ-க்களையும் பெற்று எதிர்கட்சியாக உருவெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
 
பின்னர் அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் 2015 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் 5.1 சதவீதமாக தனது வாக்கு வங்கியை குறைத்துக்கொண்டது.
 
இருந்தாலும் விஜயகாந்துக்கான மவுசு குறையவில்லை, இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுக்க கட்சிகள் போட்டி போட்டன. கடைசியில் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் தேமுதிக மண்ணை கவ்வியது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் இருக்க வேண்டும்.  ஆனால், இந்த தேர்தலில் தேமுதிக வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 
 
கடந்த முறை தேமுதிக 5.1 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தாலும் 29 எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாக இருந்ததால் அந்த அங்கீகாரத்தை இழக்காமல் இருந்தது. இந்த முறை எந்தவித கவசமும் இல்லாமல் வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டும் வைத்துள்ளதால் தேமுதிக மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கிறது. 
 
எனவே, தேமுதிக பெற்றுள்ள மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் இன்று ரத்து செய்துள்ளது. மேலும் முரசு சின்னமும் அக்கட்சியிடமிருந்து பறிக்கப்பட்டது.
 
அடுத்த தேர்தலில் 6 சதவீத ஓட்டுகள் பெற்றுத்தான் தேமுதிக இழந்த அங்கீகாரத்தை திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.