ரிஷபம்-கார்த்திகை மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran| Last Modified சனி, 15 நவம்பர் 2014 (14:46 IST)
திட்டமிடுதலில் வல்லவர்களே! உங்களின் தன&பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் யதார்த்தமாகவும், இங்கிதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். புது முதலீடு செய்து வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பும் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். பொது அறிவுத் திறன் கூடும். கோபம் குறையும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கழுத்து வலி, முதுகு வலி நீங்கும்.

புதிய முயற்சிகளும் பலிதமாகும். கடந்த ஒருமாத காலமாக உங்கள் சுகாதிபதி சூரியன் 6&வது வீட்டில் நீச்சமாகி சனியுடன் சேர்ந்திருந்ததால் அலைச்சல், ஆரோக்ய குறைவு, அளவுக்கு அதிகமான செலவுகள், சின்ன சின்ன அவமானங்களையெல்லாம் சந்தித்தீர்கள். இப்போது சூரியன் உங்கள் ராசிக்கு 7&ல் அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஆரோக்யம் கூடும். ஏமாற்றங்கள் நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த மனத்தாங்கல் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

கடந்த ஒருமாதத்திற்கு மேலாக உங்கள் ராசிக்கு 8&ல் அமர்ந்துக் கொண்டு உங்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் செவ்வாய் 22&ந் தேதி முதல் 9&ம் வீட்டிற்குள் நுழைவதால் அலைச்சல் குறையும். மனஇறுக்கங்கள், சகோதர வகையில் இருந்த சச்சரவுகள் விலகும். இழுபறியாக இருந்து வந்த சொத்துப் பிரச்னைகள் தீரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு, மனை அமையும். உங்கள் ராசிக்கு 5&ல் ராகு நிற்பதால் தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். தாய்வழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் கேது நிற்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்குகள் சாதகமாகும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ராசிக்கு 3&ல் குரு நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்களே! அலர்ஜி, இன்பெக்ஷன் விலகும். புது நண்பர்களால் ஆதாயம் உண்டு. உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

மாதத்தின் முற்பகுதியில் லாபம் குறையும். மையப்பகுதியிலிருந்து பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாகும். வேற்றுமொழிப் பேசுபவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகும். மாதத்தின் பிற்பகுதியில் புது வேலைக் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். இடையூறுகளையும், ஏமாற்றங்களையும் தாண்டி சாதிக்கும் மாதமிது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :