மகரம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்
பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே! உங்கள் ராசிக்கு 12&ம் வீட்டில் மறைந்து உங்களுக்கு ஏகப்பட்ட செலவுகளையும், அலைச்சல்களையும், கடன் பிரச்னைகளையும் அடுக்கடுக்காக தந்துக் கொண்டிருக்கும் செவ்வாய் 22&ந் தேதி முதல் உங்கள் ராசியில் உச்சம் பெற்று அமர்வதால் அலைச்சல், டென்ஷன் குறையும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். முன்கோபம் நீங்கும். கணவன்&மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்னையும் தீரும். சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கில்கள் தீரும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் அஷ்டமாதிபதியான சூரியன் லாப வீட்டில் நுழைந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் பாக்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும்.
தந்தைவழி உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உங்கள் ராசிநாதன் சனிபகவானை விட்டு சூரியன் விலகியதால் அலர்ஜி, இன்பெக்ஷன் நீங்கும். அழகு, இளமை திரும்பும். சோர்வு, களைப்பிலிருந்தும் விடுபடுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் குடும்ப வருமானம் உயரும்.
ஷேர் மூலம் பணம் வரும். கன்னிப் பெண்களே! நினைத்ததெல்லாம் நிறைவேறும். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வரனும் அமையும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். குரு சாதகமாக இருப்பதால் அரசாங்க சலுகைகள் கிடைக்கும். அரசு அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களும் நல்லவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு.
மேலதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புது சலுகைகளும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும். சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்பாராத சந்திப்புகளும், யோகங்களும் நிறைந்த மாதமிது.