வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வியாழன், 10 ஜூலை 2014 (10:44 IST)

நடிகர், நடிகைகளுக்கு சேவை வரி ரத்து - மத்திய மந்திரிக்கு சரத்குமார் கடிதம்

நடிகர், நடிகைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு அனுப்பியுள்ளார்.
இதேபோலொரு கடிதத்தை பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் சமீபத்தில் அனுப்பினார். ஜோ‌சப் விஜய் என்ற பெயரில் அவரின் பழைய முகவரியில் (தற்போது அந்த முகவரியில் விஜய் ஆண்டனியின் அலுவலகம் இயங்கி வருகிறது) கடிதம் அனுப்பியது சர்ச்சையை கிளப்பியது.
 
சரத்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்ககும் விவரங்கள் வருமாறு -
 
தென்னிந்திய திரையுலகத்தின் சார்பில் முன்னாள் நிதி மந்திரி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து சேவை வரியை ரத்து செய்யக்கோரி நேரடியாக கோரிக்கை வைத்தோம். அதேபோல், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அனைத்து நடிகர், நடிகைகளும் இணைந்து உண்ணாவிரத போராட்டம் இருந்தார்கள்.
 
இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் சேவை வரியை ரத்து செய்யவில்லை. எனவே கீழ்க்கண்ட காரணங்களுக்காக சேவை வரியை ரத்து செய்ய கோருகிறோம்.
 
* திரைப்பட நடிகர்-நடிகைகள் நாட்டில் பேரிடர் ஏற்படும் போதும், போர் அபாயம் ஏற்படும் போதும் தேவையான நிதியை வசூல் செய்து கொடுப்பதுடன் நாட்டிற்கு தேவையான அனைத்து நல்ல கருத்துக்களை திரைப்படம் மூலம் பரப்பி வருகிறோம்.
 
* திரைப்படங்கள் மூலம் தான் ஏழை-எளிய மக்கள் மகிழ்விக்கப்படுகிறார்கள்.
 
* திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு நிரந்தரமான வருவாய் கிடையாது.
 
* நடிகர், நடிகைகளுக்கான சேவை வரியை தயாரிப்பாளர்கள் கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் தயாரிப்பு செலவு அதிகமாகி தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். தயாரிப்பாளரிடம் சேவை வரியை வசூலிக்க முடியாமல் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
* ஒப்பந்தப்படி வருமானம் வராமல் எந்த வித நிதியும் இல்லாமல் நடிகர், நடிகைகள் மிகவும் அல்லலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
 
* ஒப்பந்தம் போட்ட பிறகு பல திரைப்படங்கள் தொடங்கப்படாமல் உள்ளன. அப்படி தொடங்கப்படாத படங்களுக்கும் நடிகர், நடிகைகள் எப்படி சேவை வரியை செலுத்துவது.
 
* பல திரைப்படங்கள் நிதியின்மை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் நடித்த நடிகர், நடிகைகள் சேவை வரியை செலுத்த வேண்டும் என்ற நிலை.
 
* மேற்கண்டவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிராமிய கலைஞர்கள், இசை கலைஞர்கள் நாட்டிய கலைஞர்கள், நாடக கலைஞர்கள் ஆகியோருக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது போல், திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.
 
- இவ்வாறு தனது கடிதத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.