1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (12:17 IST)

தனுஷ் தம்மடிக்கும் போஸ்டர் - தணிக்கைக்குழுவிடம் புகார்

புகையிலைக்கு எதிராக ஒருசாரர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மக்களிடம் புகையிலை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு மெதுவாக அரும்பி வருகிறது. இந்த நேரத்தில் அமிலத்தை ஊற்றுவது போல் சில படங்கள் வெளியாகி புகையிலைக்கு இலவச விளம்பரம் தேடித் தருகின்றன. 
தனுஷின் வேலையில்லா பட்டதாரியின் ட்ரெய்லரைப் பார்த்த போதே, இது படத்தின் ட்ரெய்லரா இல்லை புகையிலைக்கான ட்ரெய்லரா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தனுஷ் சிகரெட்டை ஊதித் தள்ளும் காட்சிதான் நிறைந்திருந்தது. படத்தில் அதைவிட பத்து மடங்கு அதிகம். அதுவும் கிளைமாக்சில் எதிரிகளை துவசம் செய்துவிட்டு ஸ்டைலாக சிகரெட் புகைத்தபடிதான் ஸ்லோமோஷனில் நடப்பார். 
 
சினிமாவையும், தொலைக்காட்சியையும் பார்த்து வளரும் இளைய தலைமுறைக்கு சிகரெட்டை ஸ்டைலின் குறியீடாக மாற்றுவது இதுபோன்ற படங்களும், நடிகர்களும்தான். இதனை எதிர்த்து தமிழக புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் இயக்கம் மாநில சுகாதாரத்துறையிடமும், படத்துக்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கைத்துறையிடமும் புகார் அளித்துள்ளது. தனுஷ் புகைப்பிடிக்கும் படத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
சில விஷயங்கள் எதிர்ப்பதால் நடைமுறைக்கு வருவதில்லை, நடிப்பவர்கள் திருந்தினால்தான் அது சாத்தியமாகும்.