வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

அதிமுகவை பார்த்து அஞ்சுவதால் திமுகவுக்கு எதைப்பார்த்தாலும் இரட்டை இலை போலவே தெரிகிறது - ஜெயலலிதா

அதிமுகவை பார்த்து அஞ்சுவதால் திமுகவுக்கு எதைப்பார்த்தாலும் ‘இரட்டை இலை’ போலவே தெரிகிறது என்று சிதம்பரம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
FILE

பாராளுமன்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் மா.சந்திரகாசி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சிதம்பரம் சென்றார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால், அதில் அங்கம் வகித்த திமுகவால் தமிழக மக்களுக்கு, தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பாதுகாப்புத் துறையையே பாதுகாப்பற்றது ஆக்கிவிட்ட அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. கடந்த 10 ஆண்டுகளாக முப்படைகளை நவீனமயம் ஆக்கும் நடவடிக்கைகள் எதையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுக்கவில்லை.

கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கக்கூடிய மின்கல அமைப்புகளை வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து இதன் காரணமாக இந்திய கடற்படையின் வன்பொருள்கள் பாதிக்கப்படும் என்று 2009 ஆம் ஆண்டே மத்திய தணிக்கைத்துறை கோடிட்டு காட்டியுள்ளது.

ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் விளைவு சென்ற ஆண்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மும்பை அருகே தீக்குள்ளாகியது. இதில் 18 கடற்படை வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இதே போன்று, 15 நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தீ விபத்துக்குள்ளாகி 2 கப்பற்படை வீரர்கள் மரணமுற்றனர்; 7 பேர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த ஓர் அதிகாரி, சிந்து ரத்னா மற்றும் இதர துணை நீர்மூழ்கி கப்பல்களை இயக்குவது என்பது வெடிகுண்டுடன் பயணம் செய்வதற்கு சமம் என்று தனது மூத்த அதிகாரிகளிடம் மரணம் அடைவதற்கு முன்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மரணம் அடைந்த கடற்படை அதிகாரி ஒருவரின் சகோதரி பாதுகாப்புத்துறைக்கு போதுமான நிதி ஏன் ஒதுக்கப்படுவதில்லை என ஒரு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டபோது ஏராளமான நிதி பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது என்றும்; அதனை பாதுகாப்புத்துறை விவேகத்துடனும், அறிவார்ந்த வகையிலும் செலவிடுவதில்லை என்றும்; இதில் இருந்து முப்படைகள் பாடத்தினை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனக்கே உரிய பாணியில் மமதையுடன் பேசி இருக்கிறார் மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரம்.

இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரவைக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது என்பது கூட தெரியாமல் மத்திய பாதுகாப்பு துறை சரிவர செயல்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். இதில் இருந்து மத்திய அரசின் துறைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியே இயங்குவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இது தான் மத்திய காங்கிரஸ் அரசை பிடித்துள்ள பெரும் பிணி.

6 புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கடற்படையில் இருந்து கோரிக்கை விடப்பட்டும், அதன் மீது மத்திய அரசு பாராமுகமாக இருந்ததே இது போன்ற விபத்துகளுக்கும்; கப்பற்படை வீரர்கள் மரணமுற்றதற்கும் காரணம் என்று கப்பற்படையில் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் குறைந்த அளவு முன்னுரிமையே பாதுகாப்புத் துறைக்கு அளிக்கப்படுகிறது என்றும்; அதில் மிகவும் புறக்கணிக்கப்படுவது கப்பற்படை என்றும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று கப்பற்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால், கோரிக்கையை நிராகரித்தவர்கள் இன்னமும் பதவியிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தின் நினைவு நம்மை விட்டு அகலுவதற்குள் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு இந்தியக் கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் போர்க் கப்பலில் கரியமில வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு ஒரு கடற்படை அதிகாரி மரணம் அடைந்துள்ளார். இருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 8-3-2014 அன்று அரிஹந்த் என்னும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் மட்டும் இது மூன்றாவது விபத்தாகும். பாதுகாப்புத் துறையை பொறுத்த வரையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முழுமையான அலட்சியப் போக்கே இது போன்ற விபத்துகளுக்கு காரணமாகும்.

போரில் வீர தீரத்துடன் எதிரிகளை எதிர்கொண்டு நம் இளம் வீரர்கள் வீர மரணம் அடைந்திருந்தால் அது அவர்களுக்கும் பெருமை; நாட்டுக்கும் பெருமை. ஆனால் அரசின் அலட்சியத்தால், பொறுப்பின்மையால் நாட்டைக் காக்க கப்பற்படையில் சேர்ந்த இளைஞர்களின் அகால மரணத்திற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. இறக்குமதி அதிகரித்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுள்ளது. அதன் சுமை ஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. ‘இந்த சுமையிலிருந்து விடுபட தேவை மாறுதல். அதற்கு வழி வகுக்க இருப்பது வருகின்ற மக்களவை தேர்தல்’ என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல்; ஹெலிகாப்டர் ஊழல்; நிலக்கரி ஊழல்; காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல்; விமானத்திற்கான என்ஜின் வாங்கியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது திமுக என்பதை மறந்து விடாதீர்கள். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை ஆகும்.

கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக தமிழ்நாட்டிற்காக எதையாவது செய்ததா?. ‘மக்கள் நலம்’ ‘மக்கள் நலம்’ என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள் நலத்தை மறந்துவிட்டார். நீங்களும் கருணாநிதியை மறந்து விட்டீர்கள். இதனால் விரக்தி அடைந்த கருணாநிதி, தனது மகன் ஸ்டாலின் மூலம் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ‘இரட்டை இலை’ போன்ற தோற்றம் அளிப்பவை இருக்கிறதோ, அவற்றையெல்லாம் மறைக்க வேண்டும் என்ற ரீதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்திடமும் திமுக சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டு உள்ளது. அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம் கை. அனைவரின் கைகளையும் வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்?; அல்லது கையுறைகளை போட்டுக் கொண்டு கைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்?. சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று மனு கொடுப்பார்களா?. ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் இருக்கிறது. எனவே மாம்பழம் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் மனு கொடுப்பாரா?.

இது போன்றது தான் ‘இரட்டை இலை’ சின்னமும். “காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது பழமொழி. இதைப் போல், அதிமுகவை கண்டு அஞ்சும் திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் “இரட்டை இலை” போலவே தெரிகிறது. அதனால் தான் ஓயாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இந்த தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமையை நீங்கள் அதிமுகவிற்கு அளிக்க வேண்டும். எங்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.