1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 16 ஜூலை 2014 (19:31 IST)

கவுண்டவுன் ஸ்டார்ட் - ஜூலை 31 வெளியாகும் ரஹ்மானின் காவிய இசை

வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்தின் பாடல்கள் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல்கள் இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்குரியவையாக கருதப்படுகின்றன.
 
ரஹ்மானின் ஆல்பம் ஒன்று வெளியாவது அவரது ரசிகர்களுக்கு திருவிழாவைப் போன்றது. காவியத் தலைவன் இன்னும் ஸ்பெஷல். காரணம் படத்தின் கதை நடக்கும் காலகட்டம்.
சுதந்திரத்துக்கு முன்பு 1920களில் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் இயங்கி வந்த நாடக கம்பெனிகளின் பின்புலத்தில் காவியத்தலைவன் கதை சொல்லப்படுகிறது. நாடக கம்பெனிகள், அதில் நடிக்கும் நடிகர்கள் என இதுவரை தமிழ் சினிமா அறிந்திராத பகுதிகள். பழைய காலகட்டம் என்பதால் பழைய படங்களில் வருவது போல் இருபதைத் தொடும் குறும் பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. 
 
காவியத் தலைவனுக்காக அந்தக்கால இசை குறித்து ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்தே இசையமைக்கும் பணியில் இறங்கினார் ரஹ்மான். அவர் அதிகம் பயன்படுத்தாத கர்னாடிக் இசை இதில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
ரசிகர்கள் காவியத் தலைவன் இசையை எதிர்நோக்க இந்த காரணங்கள் போதாதா?
 
சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.