வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (17:42 IST)

இயக்குநரை வாடாபோடா என்று அழைத்து நடிகை பூஜா கலாட்டா!

இயக்குநரை வாடாபோடா என்று அழைத்து நடிகை பூஜா ஒரு பட விழாவில் கலாட்டா செய்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:
 
'கடவுள் பாதி மிருகம் பாதி' படம் ஒரே நாளில் நடக்கும் பரபர சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர். 
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்லவன் கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவான படம்தான் 'கடவுள் பாதி மிருகம் பாதி'. 
 
இந்தக் கதை நடப்பது சென்னை டு ஹைதராபாத் பழைய ஹைவேயில். முதல்நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவில் முடிகிறது. இது ஒரே நாளில் நடக்கும் கதை. 
 
ஹைவேயில் பயணம் செய்யும் சில முக்கிய கேரக்டர்கள் அவை சந்திக்கும் சம்பவங்கள்தான் பரபரப்பான சஸ்பென்ஸ். 
 
இப்படத்தில் அபிஷேக்கிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா ஸ்வேதா விஜய் நடித்துள்ளார். பூஜா கௌரவ வேடம் ஏற்றுள்ளார். 'மைனா' சேதுவும் முக்கிய பாத்திரம் சுமந்துள்ளார். இயக்குநர் தயாரிப்பாளர் ராஜும் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
 
இயக்கம் ராஜ் மற்றும் சுரேஷ்குமார் . ஒளிப்பதிவு கிஷோர்மணி. இசை ராகுல்ராஜ். இப்படத்தில் 3 பாடல்கள். கருணாகரன் எழுதியுள்ளார். 
 
இயக்குநர் ராஜ் தனது 'செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் 'நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். 
 
'கடவுள் பாதி மிருகம் பாதி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது. 
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூஜா பேசியது அரங்கையே கல கலப்பில் குலுங்க வைத்தது. 
 
இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பவரான ராஜ் பற்றிக் குறிப்பிட்டவர்,
 
"நான் பெங்களூரில் கல்லூரியில் படித்தபோது ராஜைத் தெரியும். நான் பெண்கள் கல்லூரி அவன் படித்தது ஆண்கள் பெண்கள் படிக்கும் கோஎட் கல்லூரி. ஒரு கல்ச்சுரல் -கலை நிகழ்ச்சியின் போது அவனைப் பார்த்தேன். அவனுக்கு என்னைப் பிடிக்கும். எங்களுக்குள் ஈர்ப்பு இருந்தது அது காதல் இல்லை. அப்போது எனக்கு 16 வயதுதான் எனக்கு. அப்போது காதல் பற்றி தெரியாத வயது. 
 

ஏய் ரொம்ப அழகா இருக்கேன்னு ஒருமுறை சொன்னான். இன்னொரு முறை ஏதோ பேசினான். போடான்னு சொன்னேன். எங்களுக்குள் நட்பு இருந்தது. 
 
எந்த ஆண் பையனுடன் பழக்கம் வேண்டாம் என்பது எனக்கு அப்பாவின் கண்டிப்பான உத்தரவு. படிப்புதான் முக்கியம் . எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார். அதனால் எனக்கு யார் கூடவும் காதல் இல்லை. அப்படித்தான் ஒரு ஆரோக்கியமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது. 
ஒரு நாள் ராஜ் 'படமெடுக்கிறேன்' என்று சொன்னான். 'என்னடா நம்பவே முடியவில்லையே' என்றேன். 'படம் டைரக்ஷன் பண்றேன். நான்தான் தயாரிப்பாளர்' என்றான். 'பொய் சொல்லாதே' என்றேன். 'உண்மைதான்' என்றான். 'என்னிடம் காசு இல்லை. காசுமட்டும் கேட்காதே ' என்றான். 'நீ நடிக்க வேண்டும். ஒரு கேமியோ ரோல் பண்ண வேண்டும் 'என்றான். உடனே ஓகேசொன்னேன். அவ்வளவுதான். 
 
3 நாள் படப்பிடிப்பு போனேன். ராஜ் 16 வயதிலிருந்து நண்பன் அவன் படமெடுப்பது மிக்க மகிழ்ச்சி. 
 
இந்த ராஜ் தங்கமான மனசுக்காரன். இவனது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். "என்றவர். 'நமக்குள் ஒன்றும் இல்லைதானே?' என்ற போது இயக்குநர் ராஜ், "இப்போதும் நான் உனக்காகக் காத்திருக்கிறேன். "என்றார். 
 
இயக்குநர் ராஜ் பேசும்போது "எங்கள் முதல் முயற்சி இது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த விழாவுக்கு 1000 பேரைக் கூப்பிட்டேன். கொஞ்சம் சிலபேர்தான் வந்திருக்கிறார்கள். ஆர்யா வை நடிக்க கூப்பிட்டேன் காக்கவைத்து ஏமாற்றி விட்டார்"என்றார். அவரை இடைமறித்த பூஜா. . "இப்படி மடத்தனமா பேசினா எப்படி? ஏன்டா. . இப்படி கை கால் எல்லாம் ஆடுது. டான்ஸ் ஆடாதே. நேரா நின்னு பேசுடா. . ஒழுங்காக முதலில் வந்தவர்களை வரவேற்று விட்டுப் பேசு. . அதுவும் தமிழில் பேசு. "என்று அறிவுரை வழங்கினார். 
 
"இங்கு புதுமையான எந்த விஷயத்துக்கும் வரவேற்பு தருவார்கள். எனக்கும் ஆதரவு தருவார்கள்." என்றார் இசையமைப்பாளர் ராகுல்ராஜ். 
 
பாடகர் உன்னி கிருஷ்ணன் பேசும்போது ''பாடல்கள் ட்ரெய்லர் சுறு சுறுப்பாக உள்ளது. படமும் சுறு சுறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். என்றார். 
 
பாடகர் விஜய் ஏசுதாஸ் பேசும்போது "எனக்கு ராஜை பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் நன்றாக கிரிக்கெட் ஆடுவார். திறமைசாலிகளை இருகரம் நீட்டி வரவேற்பது தமிழ்நாட்டின் பண்பு. மலையாளம், தெலுங்கு திறமைசாலிகளையும் திறந்த மனதுடன் வரவேற்பார்கள். அதுதான் தமிழ்நாடு சென்னை. "என்றார். 
 
தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா பேசும்போது "பாடல்கள் நன்றாக உள்ளன. இயக்குநருக்கு நல்லதொரு பெரிய தொடக்கமாக இப்படம் அமைய வாழ்த்துக்கள். பூஜா மனம்விட்டுப் பேசினார். இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. இது எங்கு போய் முடியுமோதெரியவில்லை'' என்று கூறி வாழ்த்தினார். 
 
நிகழ்ச்சியில் ஃபுல் ஹவுஸ் சார்பில் தயாரிப்பில் இணைந்துள்ள ஜேசன், ஒளிப்பதிவாளர் கிஷோர்மணி, பாடலாசிரியர் கருணாகரன், நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், நடிகர் அபிஷேக், வசனகர்த்தா பிரபாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.