1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 1 நவம்பர் 2014 (16:44 IST)

அப்துல்லாவாக பெயர் மாறும் யுவன், முஸ்லீம் பெண்ணை மணக்கிறார்

யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிசாவுக்கும் கடந்த 29 -ஆம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது. அதனை யுவனின் சகோதரி பவதாரிணி ஒப்புக் கொண்டுள்ளார்.
 
யுவன் கடந்த 2005 -ஆம் ஆண்டு தனது நெடுநாள் காதலியான லண்டனைச் சேர்ந்த சுஜயாவை திருமணம் செய்தார். இந்தத் திருமணம் அதிக நாள் நீடிக்கவில்லை. 2008 -இல் இருவரும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தனர்.
 
2011 -ஆம் ஆண்டு யுவன் இரண்டாவது திருமணம் செய்தார். மணமகள் ஷில்பா மோகன். அந்தத் திருமணத்தின் ஆயுட்காலமும் நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர்.
 
தனது தாயின் மரணத்துக்குப் பின் இஸ்லாம் மதத்தை தழுவிய யுவன் முஸ்லீம் பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்யப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மணப்பெண்ணின் பெயர் ஜப்ருன்னிஸn என்று தகவலும் வெளியானது.
 
இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 29 -ஆம் தேதி நடந்ததாக தகவல் வெளியானது. திருமணத்துக்கு முன் யுவன் அப்துல்லா என்று தனது பெயரை மாற்றி முழுமையான முஸ்லீமாக மாறவிருக்கிறார் எனவும் கூறப்பட்டது.
 
இதனை தற்போது பவதாரிணி ஒப்புக் கொண்டுள்ளார். யுவன் முஸ்லீமாக மதம் மாற இருப்பதையும், மூன்றாவது திருமணம் செய்யவிருப்பதையும் சம்மதித்த அவர், எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை யுவனின் மகிழ்ச்சிதான் முக்கியமானது. யுவன் மது அருந்துவதோ, புகைப்பிடிப்பதோ கிடையாது. 15 வயதிலிருந்து இசைத்துறையில் இருக்கிறார். யாரையும் ஏமாற்றியதுமில்லை.
 
எந்த மதம் என்பது முக்கியமில்லை மனிதனாக இருப்பதே முக்கியம், யுவன் சிறந்த மனிதர் என்று பவதாரிணி குறிப்பிட்டுள்ளார்.