‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?
தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2’ படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போகலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்துள்ள படம் ‘விஐபி 2’. 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படம், தனுஷின் பிறந்தநாளான 28ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் மாற்றம் இருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. திட்டமிட்டபடி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால், 10 நாட்களுக்குப் பிறகு ரிலீஸாகலாம் என்கிறார்கள். இரண்டாம் பாகம் கண்டிருக்கும் படங்களான ‘விஐபி’, ‘மாரி’ இரண்டுமே ஜூலை மாதத்தில் வெளியானவைதான். எனவே, தனுஷுக்கும், ஜூலைக்கும் ராசி என்று கருதப்படுகிறது.
அத்துடன், இம்முறை தனுஷின் பிறந்தநாள் சரியாக வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்று டபுள் தமாக்காவாக கொண்டாடலாம் என்று காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைக்கப் போகிறது என்கிறார்கள்.