1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (16:54 IST)

விஜய் ஏன் வரக்கூடாது? அவரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம் - செல்லூர் ராஜு!

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், அதிமுக vs திமுக என்ற நிலை மாற வழியே இல்லை, எடப்பாடி பழனிச்சாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
 
செல்லூர் ராஜூ அளித்த பேட்டி:
 
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. 
உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தின் தலைவர் யார் என்பது தான் எல்லோரிடமும் போட்டியாக உள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதைப்பற்றி பேசவே இல்லையே. ராகுலை பிடிக்கவில்லையா? காங்கிரஸ் உடன் உரசல் ஏற்பட்டுள்ளதா?
 
மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் சொல்வது சரி தான். 
அதிமுகவும் அதைத்தான் சொல்கிறது. பாஜக தலைமையில் கூட்டணி என அண்ணாமலை சொல்வது கட்சியை வளர்ப்பதற்காகத்தான். பின்னர் அவரே அந்த கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.
 
தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னார். 2014ல் லேடியா மோடியா என ஜெயலலிதா கேட்ட போது அவருக்கே மக்கள் வாக்களித்தனர். அதுபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.
 
அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.  யார் யாரோ  தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என சொல்ல முடியாது.
ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான். 
 
அதிமுக vs திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. 
எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார். 
 
இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா?
அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா? அவர் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்வார்