விஜய்யுடன் மோதும் விக்ரம்?
விஜய்யின் ‘மெர்சல்’ படத்துடன், விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ மோதலாம் எனத் தெரிகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ‘மெர்சல்’. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விக்ரம் நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா மற்றும் ஸ்ரீபிரியங்கா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
சமீபத்தில், இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவுற்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை, அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர். எனவே, தீபாவளிக்கு ரிலீஸ் நிச்சயம் என்கிறார்கள். ஆனால், சென்சார் ஆன பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஏற்கெனவே விக்ரமின் ‘பிதாமகன்’ மற்றும் ‘மஜா’ படங்கள், விஜய்யின் ‘திருமலை’ மற்றும் ‘சிவகாசி’யுடன் மோதியது குறிப்பிடத்தக்கது.