வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (16:51 IST)

விஜய் பட சம்பள பாக்கி - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மேஜிக் நிபுணர்கள்!

மெர்சல் படத்தில் பணியாற்றியதற்கான 4 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி இன்னும் தனக்கு வழங்கவில்லை என்று மேஜிக் நிபுணர் தயாரிப்பு நிறுவனத்தாரிடம் பேசும் தொலைபேசி உரையாடலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். 


 
அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் மெர்சல். எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்திருந்தார். இதில், ஒரு வேடத்தில் மேஜிக் கலைஞராக விஜய் நடித்திருந்தார்.
 
இதற்காக, மூன்று மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்று பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்த படத்தின் மேஜிக் பற்றியும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கான காட்சிகள் படமாக்கப்படும் போது ராமன் சர்மா என்கிற நிஜ மேஜிக் கலைஞர் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றினார். 
 
இதற்காக அவரிடம் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க தேனாண்டாள் நிறுவனம் பேசியிருந்தது. ஆனால் மேஜிக் நிபுணர் ராமன் சர்மா தனக்கு தயாரிப்பு நிறுவனம் பேசப்பட்ட சம்பளத்தை இன்னும்  வழங்கவில்லை என்றும், ஊதியத்தை முறைப்படி வழங்க காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்துள்ளார். 
 
 இதுதொடர்பாக தொடர்ந்து சமூகவலைதளங்களில் புகாரை கிளப்பி வரும் ராமன் சர்மா, தற்போது சம்பள பாக்கி குறித்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிர்வாகி உடன் தொலைப்பேசியில் பேசும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் நவம்பர் 26ம் தேதிக்குள் பணம் தந்துவிடுவதாக எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் தேதி டிசம்பர் 6 வந்துவிட்டது. இன்னும் எனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என ராமன் சர்மா பேசியுள்ளார். 
 
அதற்கு பதிலளிக்கும் தேனாண்டாள் நிறுவனத்தின் நிர்வாகி, இன்னும் ஓரிரு நாட்களில்  நிச்சயம் பணம் கிடைத்து விடும். சம்பள பாக்கி இருக்கும் அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டு விடும் என்று கூறுகிறார். நிறைவாக பேசும் ராமன் சர்மா ஓரிரு நாட்களில் பணம் வரவில்லை என்றால் வீடியோ போட்டுவிடுவேன் என்கிறார். 
 
இன்று தனது காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, இந்த வீடியோவை ராமன் சர்மா பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியுள்ள ராமன் சர்மா, அதில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளையும் டேக் செய்துள்ளார். 
 
சர்கார் பிரச்னை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மெர்சலால் மீண்டும் ஒரு பிரச்னை கிளப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.