வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (15:29 IST)

எனக்கு கேப்பும் இல்லை ; ஆப்பும் இல்லை ; எப்பவுமே டாப்புதான் : வடிவேலு அதிரடி

எனக்கு கேப்பும் இல்லை ; ஆப்பும் இல்லை ; எப்பவுமே டாப்புதான் : வடிவேலு அதிரடி

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு, நான் எப்பவுமே டாப்புதான் என்று பேசியுள்ளார்.


 

 
சினிமா மார்கெட் நன்றாக போய்கொண்டிருந்த நிலையில், நடிகரும், தேமுதிக தலைவரான விஜயகாந்தை திட்டுவதற்காகவே, வலுக்கட்டாயமாக திமுக பக்கம் சென்று, பிரச்சாரம் செய்தார் வடிவேலு. போகும் இடங்களில் எல்லாம் விஜயகாந்தை கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்தார். கூட்டம் கூடியது. ஆனால் ஓட்டு என்னவோ விஜயகாந்த்திற்குத்தான் கிடைத்தது.
 
இதனால், சினிமா உலகம் இவரை ஓரங்கட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கிடைத்த கேப்பில் நடிகர் சந்தானம் தனது மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். இதனால் ஏறக்குறை 3 வருடங்கள் சினிமா வாய்ப்பின்றி வீட்டிலேயே இருந்தார் வடிவேலு. அதன்பின் இரு படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறவில்லை.
 
இந்நிலையில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘கத்திச்சண்டை’  படத்தில் மீண்டும் காமெடி நடிகனாக களம் இறங்கியுள்ளார் வடிவேலு. 
 
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய வடிவேல் ‘நான் வெகு நாட்களுக்கு பிறகு நடிக்க வருவதால், கேப் விழுந்து விட்டதாக நிறைய பேர் பேசினார்கள். எனக்கும் கேப்பும் இல்லை, ஆப்பும் இல்லை. இந்த வடிவேலு எப்பவுமே டாப்புதான்.  இன்றைக்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் என எல்லாவற்றிலும் என்னுடைய வசனங்கள்தான் இடம் பெறுகிறது. படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால், நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று நிறைய கதை கேட்டுக் கொண்டிருந்தேன். இதில் சுராஜ் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. 
 
ஏற்கனவே விஷாலுடன் ‘திமிரு’ படத்தில் நடித்துள்ளேன். அப்படம் வெற்றி. இந்த படமும் கண்டிப்பாக ஹிட் ஆகும்’ என்று பேசினார்.