1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2016 (11:22 IST)

கபாலிக்கு எந்த அடிப்படையில் யு சான்றிதழ் கொடுத்தீர்கள்? - கேள்வி எழுப்பும் எஸ்.வி.சேகர்

கபாலிக்கு எதன் அடிப்படையில் யு சான்றிதழ் அளித்தீர்கள் என்று தணிக்கைக்குழுவிடம் விவாதம் செய்துள்ளார் எஸ்.வி.சேகர். தணிக்கைக்குழு என்பது மிகவும் பாரபட்சமாகவும், நியாயமில்லாமலும் நடந்து கொள்ளும் ஓர் அமைப்பு என்ற குற்றச்சாட்டை அவர்கள் தொடர்ந்து நிரூபித்தவண்ணம் உள்ளனர்.

 
மதன் குமார் இயக்கத்தில் எஸ்.வி.சேகர், அஸ்வின் சேகர், விசு, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மணல் கயிறு 2. இந்தப் படத்துக்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். எஸ்.வி.சேகர் இது தொடர்பாக தணிக்கை அதிகாரிகளுடன் விவாதம் செய்துள்ளார்.
 
"நீங்கள் எந்த அடிப்படையில் யுஏ சொல்கிறீர்களோ, அதற்கு உண்டான அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். 
 
நீங்கள் கொடுக்கும் சான்றிதழை வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னும் படத்துக்கு வெளியீட்டு தேதி முடிவு செய்யவில்லை.
 
நாங்கள் எடுத்திருக்கும் படத்துக்கு நியாயமான சான்றிதழ் கிடைக்கும்வரை போராடுவேன். அதற்காக நான் மறுஆய்வுக்குச் செல்ல மாட்டேன். உயர்நீதிமன்றம் செல்வேன். கபாலி படத்துக்கு எதன் அடிப்படையில் யு சான்றிதழ் கொடுத்தீர்கள் என தெரிந்துக் கொள்வேன். அதற்குப் பிறகு என்னுடைய படத்தை நீதிபதியே பார்க்கட்டும் எனச் சொல்வேன். பார்த்தப் பிறகு அவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஒப்புக் கொள்வேன்" என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.