வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 1 மே 2016 (09:34 IST)

தெறி பிரச்சனை முடிந்தது - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை

தெறி பிரச்சனை தொடர்பாகவும், மாதத்தின் ஒருவாரம் சிறு பட்ஜெட் படங்களை மட்டும் திரையிடுவது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை -


 

 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது.
 
அதில் சென்னை-செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தெறி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு ஆகியோர் இடையே உள்ள பிரச்சினை குறித்து பேசப்பட்டு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.
 
மூன்று அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து பேசி, தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான செயல்களை வரைமுறைப்படுத்தவும், அரசிடம் பேசி வாங்க வேண்டிய சலுகைகளை கேட்டு வாங்கவும் ஒரு உயர்மட்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில், எஸ்.தாணு, அருள்பதி, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட திரைப்பட பாதுகாப்பு குழு உருவாக்கப்படுகிறது.
 
இந்த குழுவின் ஆலோசனைப்படி, குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் நலன் காக்க வேண்டி, மாதத்தில் ஒரு வாரம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
தமிழக அரசின் மானிய தொகை தயாரிப்பாளர்களுக்கு உடனடியாக கிடைக்க, அமையப்போகும் தமிழக அரசிடம் முறையிட்டு பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.