ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (14:41 IST)

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கான நான்கு மொழி டப்பிங் பணிகளை மேற்கொண்ட ஆர்.பி. பாலாவின் ஆர்பி ஃபிலிம்ஸ்!

பன்மொழி டப்பிங் பணிகளுக்காக மிகவும் பிரபலமான ஆளுமை ஆர்.பி. பாலா. இவரின் ஆர்பி ஃபிலிம்ஸ், பிருத்விராஜ் சுகுமாரனின் 'ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்' திரைப்படத்திற்கான டப்பிங் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. 
 
இந்தப் படம்  உலகம் முழுவதும் 5 வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இயக்குநர் பிளெஸ்ஸியின் தலைசிறந்த படைப்புக்கு உயிர் கொடுத்து அதன் நம்பகத்தன்மையைக் கொண்டு வந்த அனுபவத்தைப் பற்றி அவர் பகிர்ந்ததாவது:
 
 "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதைப் பற்றி தெரிந்து கொண்டேன். எனது தனிப்பட்ட திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். கிட்டத்தட்ட அடுத்த மூன்று நாட்கள் தூக்கத்தை இழக்கும் அளவிற்கு இந்தப் படம் என்னைக் கவர்ந்தது. நான் இதற்கு முன்பு பிருத்விராஜ் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமான 'லூசிஃபர்' படத்திலும், 'கடுவா', 'தங்கம்', 'ஜனகனமன' உள்ளிட்ட அவருடைய மற்ற படங்களிலும் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படங்கள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதுமட்டுமில்லாமல் மோகன்லால் சார், பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோரின் படங்களுக்கும் நான் டப்பிங் பேசி இருக்கிறேன்”.
 
மேலும், “பொதுவாக, ஒரு படத்தைப் பார்த்த பிறகு டப்பிங் கலைஞர்களின் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்குவேன். இருந்தாலும், இந்த குறிப்பிட்ட படம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த படம் பார்த்த பிறகு, பிருத்விராஜ் தவிர வேறு எந்த நடிகரும் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியாது என ஆச்சரியப்பட்டேன். முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் சார் ஏற்கனவே கைவசம் இருக்கும் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படப்பிடிப்பில் இருப்பதால், இந்தப் படத்தை எளிதாக மறுத்திருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. பிளெஸ்ஸி சார் ஸ்கிரிப்ட்டில் 14 ஆண்டுகள் செலவிட்டார்.
 
புரொடக்‌ஷன் வேலை 6 ஆண்டுகள் ஆனது. முழு குழுவும் பல கஷ்டங்களை எதிர்கொண்டது. குறிப்பாக, கோவிட் சமயத்தில் ஒரு தரிசு பாலைவனத்தில் படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவினர் அங்கு சிக்கிக் கொண்டனர்” என்றார். 
 
”இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பிளெஸ்ஸி சார் மிகவும் எளிமையானவர். இந்தப் படத்திற்காக பிருத்விராஜ் சார் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் குரல் கொடுத்துள்ளார். ஐந்தே நாட்களில் டப்பிங் முடிந்துவிட்டது. ஒவ்வொரு மொழியிலும் மொழியியல் நுணுக்கங்களை அவர் உன்னிப்பாகக் கவனிக்கிறார் என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ‘புலி முருகன்' படத்தைப் பார்த்தவுடன், இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக இருக்கும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையை 'ஆடுஜீவிதம்' பெற்றுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் நான் கடின உழைப்புக் கொடுப்பேன். இந்தப் படம் நேரடித் தமிழ்ப்படம் போல இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தினேன் என்றார்.