1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (11:53 IST)

அமெரிக்காவில் முதல் தமிழ் குறும்படப் போட்டி - கார்த்திக் சுப்பராஜ், நெப்போலியன் பங்கேற்பு

அமெரிக்காவில் முதல் தமிழ் குறும்படப் போட்டி - கார்த்திக் சுப்பராஜ், நெப்போலியன் பங்கேற்பு

தமிழர்களின் கனவு தேசமான சிலிக்கான் வேலியில் (சான் ஃப்ரான்சிஸ்கோ) முதன் முறையாக அமெரிக்கத் தமிழர்களுக்கான குறும்படப் போட்டி நடைபெறுகிறது. 


 
 
நடுவர்களாக  இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பரத்பாலா மற்றும் நடிகர் நெப்போலியன் பங்கேற்கின்றனர்.  
 
சான் ஃப்ரான்சிஸ்கோ – சான் ஓசே பகுதியில் செயல்பட்டு வரும் விரிகுடாக் கலைக்கூடம் சார்பில் பிப்ரவரி 6-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, குப்பெர்டினோ டெ அன்சா கல்லூரி (De Anza College) அரங்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
 
இறுதிப் போட்டியில் இடம்பெறும் ஆறு படங்களிலிருந்து வெற்றியாளர்களை கார்த்திக் சுப்பராஜ், வந்தே மாதரம், மரியான் புகழ் பரத் பாலா தேர்ந்தெடுக்க உள்ளனர்.  நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். 
 
மாலை ஐந்து மணிக்கு ரெட் கார்பெட் வரவேற்புடன் தொடங்கும் நிகழ்ச்சியில், 6 மணி அளவில் படங்கள் திரையிடப்படுகின்றன. உணவு இடைவேளைக்குப் பிறகு 8.30 மணி அளவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு  நடைபெறும்.
 
நேரடியாக அரங்கத்தில் திரையிடப்படும் ஆறு படங்களிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அவருக்கு ‘அமெரிக்கத் தமிழரின் நம்பிக்கை இயக்குநர்’ விருதை கார்த்திக் சுப்பராஜ் வழங்க உள்ளார். விருதுடன் ஐந்தாயிரம் (ரூ 3 லட்சம்) டாலர் பரிசுத் தொகையும் உண்டு. இவ்வளவு பெரிய பரிசுத் தொகையுடன் நடக்கும் முதல் குறும்படப் போட்டி இதுவே. 

மேலும் 14 பிரிவுகளில் வெவ்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பரிசுக் கேடயங்கள் அனைத்தும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற நிறுவனத்திலிருந்து தருவிக்கப்படுகின்றன. 
 
அமெரிக்காவில் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக திரையிடப்பட்டு தேர்வு செய்யப்படும் முதல் குறும்படப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.