படப்பிடிப்பில் ஷாருக் கானுக்கு மூக்கில் காயம்… அமெரிக்காவில் நடந்த அறுவை சிகிச்சை!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிவடைந்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தவிர ஷாருக் கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டங்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக அமெரிக்கா சென்ற ஷாருக் கான், அங்கு ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில் மூக்கில் காயமடைந்ததால் அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் இந்தியா திரும்பியுள்ள ஷாருக் கான் தற்போது ஓய்வில் இருப்பதாகவும், காயம் முழுமையாக குணமானதும் மீண்டும் டங்கி ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.