வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (07:31 IST)

இளையராஜாவுடன் சண்டையா ? – சீனு ராமசாமி விளக்கம் !

மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனுராமசாமிக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்தது.

தற்போது இந்த படத்துக்கு இசையமைக்கும் வேளைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்படத்துக்கு முதல் முறையாக இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களை எழுத வைரமுத்துவை சீனு ராமசாமி பரிந்துரை செய்ததாகவும் அதனால் இளையராஜா அவர் மேல் கோபப்பட்டு அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சீனுராமசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்.
நான் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா அவர்களிடம் அவர் புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.

“திருமணம் ஆகிக் குழந்தை பிறந்து விட்டது, நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்குக் காட்டினோம். படத்தின் இடைவேளைக்குக்கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார்.

படத்தில் பாடல் காட்சி வரும்போது மட்டும் உதாரணத்திற்கு “உன்னை விட இந்த உலகத்தில் உயர்ந்தது ஒண்ணும் இல்ல. அது மாதிரி சார்” என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா?

எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களைக் கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார். படத்தில் பாடல்கள் என்று வந்தபோது, “அண்ணன் பழனிபாரதிக்கும், கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன். யுவன் தரப்பில் “பா.விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில், “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில், நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். எனக்கு இயக்குநராக முழு சுதந்திரத்தை, தயாரிப்பாளராக அவர் (யுவன்) வழங்கியிருக்கிறார். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் நான்காவது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு ஏழாவது படம். இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால், அவர் பிறந்த பண்ணைப்புரத்தை கதாநாயகன் வாழும் ஊராகப் படம் பிடித்திருக்கிறேன். இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நான் யாரையும் அவருக்குச் சிபாரிசு செய்யவில்லை. என் மீது அவருக்குக் கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய். நானும், யுவனும், கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம். தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்குத் தேசிய விருது கிடைத்தது. இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிகிறோம். நிச்சயமாக இந்தப் படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமெனக் கருதுகிறேன்.
அன்புடன்,
சீனு ராமசாமி
திரைப்பட இயக்குநர்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.