திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (09:24 IST)

பிரசவத்திற்குப் பின் உங்கள் அம்மா அழகை இழந்துவிட்டாரா ? – கிண்டல் செய்தவர்களுக்கு சமீரா ரெட்டி கேள்வி !

பிரபல நடிகை சமீரா ரெட்டி கருவுற்றிருக்கும் தனது உடல்குறித்து கேலிப் பேசியவர்களுக்கு எதிராக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.  இந்நிலையில் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் அவர் தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் புகைப்படங்களை வைத்து அவரது உடலமைப்பைக் கேலி செய்யும்விதமாக பதிவுகளும் மீம்ஸ்களும் உருவாக்க ஆரம்பித்தனர் சிலர். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ ஆரம்பிக்க சமீராவின் கண்களுக்கும் அந்த மீம்ஸ்கள் சென்றிருக்கிறது. பொறுப்பற்ற இந்த செய்கையால் அதிருப்தியடைந்த சமீரா இது குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ’உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு கேள்வி.. நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று அவரிடமே கேளுங்கள். உடலமைப்பைப் பற்றி விமர்சிப்பது தவறானது, அவமதிப்பானது. என் தற்போதைய உடலமைப்பு குறித்தும் கருவுற்றது குறித்தும் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’ எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.