1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (07:50 IST)

இன்று முதல் ரசிகர்களை சந்திக்கவிருக்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை  சந்தித்தார். மாவட்ட வாரியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினிகாந்த் பேசியது மிகுந்த பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து இரண்டாவது கட்டமாக நடக்கவிருக்கும் இந்த சந்திப்பு இன்று(டிசம்பர் 26) முதல்  டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். ரஜினிகாந்தை சந்திக்க வரும் ஒவ்வொரு ரசிகருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை இல்லாதவர்கள், ரஜினியைச் சந்திக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெறும் ராகவேந்திரா திருமண மண்டபப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.