1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (09:15 IST)

கவிஞர் வைரமுத்து வீடு முற்றுகை - 200 பேர் கைது

கவிஞர் வைரமுத்து வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதி தமிழர் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி படத்துக்கு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி வசனம் எழுதியிருந்தார். படத்தில், பகடைக்குப் பிறந்தவர்கள் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. அந்த வசனம் குறிப்பிட்ட சாதியனரை இழிவு செய்வதாகக் கூறி மதுரையில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகுபலி ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து சென்னை ட்ரஸ்ட்புரத்தில் உள்ள வைரமுத்துவின் வீட்டை ஆதி தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் நேற்று முற்றுகையிட முயன்றனர். அருந்ததியினர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் மதன் கார்க்கி வசனம் எழுதியிருந்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினர். வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிட முயன்ற அவர்கள் சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளு முள்ளு நடந்தது. பிறகு, அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆதி தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு கோடம்பாக்க நகராட்சி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் குறித்து மதன் கார்க்கி ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்திருந்தார். யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும், சர்ச்சைக்குரிய வசனத்தை படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
 
வைரமுத்து சிறிது காலமாக ட்ரஸ்ட்புரம் வீட்டில் இல்லை. அவர் பெசன்ட் நகர் பகுதிக்கு குடியேறி பல மாதங்களாகிறது.