வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2020 (18:55 IST)

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே”!

இளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.
 
இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது....
 
“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி  வாழ்வில்  நிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை  இப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.
 
டிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது  கதையின் சுவாரஸ்யத்தை  உடைத்து விடாதா என வினவியபோது ...
 
படகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.
 
படக்குழு பற்றி பேசும்போது ...
அசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.
 
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.