பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தற்கொலை
டெல்லியை அடுத்த நொய்டாவிலுள்ள செக்டார் 77 பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா கவுசிக். இவர் அங்குள்ள பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு ராதிகா, அவரது குடியிருப்பில் இருக்கும் 4-வது மாடியின் பால்கனியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். செய்தி வாசிப்பாளர் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராதிகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே ராதிகாவின் மரணத்திற்கு அவருடன் பணிபுரியும் ஆண் நண்பர்தான் காரணம் என்றும், அவர் தான் ராதிகாவை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாகவும் ராதிகாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சம்பவம் நடைபெற்றபோது ராதிகா மது அருந்தியுள்ளார். அவரது மரணம் கொலையாகவோ அல்லது தற்கொலையாகவோ இருக்கலாம். உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்த பிறகே செய்தி வாசிப்பாளரின் மரணம் குறித்து தகவல் வெளிவரும்" என தெரிவித்தனர்.