1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Modified: புதன், 25 ஜூன் 2014 (17:22 IST)

ஒரு கொடையாளன் போய்விட்டான் - கவிஞர் வைரமுத்து சுவிட்சர்லாந்திலிருந்து அஞ்சலி!

இயக்குநர் இராம.நாராயணன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து, சுவிட்சர்லாந்திலிருந்து எழுதிய இரங்கல் குறிப்பில் ஒரு கொடையாளன் போய்விட்டான் என்று வருந்தியிருக்கிறார்.
 
அவரது இரங்கல் செய்தி வருமாறு:
 
இயக்குநர் இராம.நாராயணன் மறைவு இன்று என் பகல் மீது கறுப்புவண்ணம் பூசிவிட்டது. கலங்கித்தான் போனேன். என் பேச்சுத் துணை ஒன்று போய்விட்டது. திரை உலகின் ஒரு சில உண்மை விளம்பிகளுள் ஒருவர் மறைந்து போனார். நூறு படங்களுக்கு மேல் இயக்கி சில ஆயிரம் குடும்பங்களுக்குத் தொழில் தந்த ஒரு தயாரிப்பாளரை இழந்துவிட்டது திரை உலகம்.
 
வாழ்வின் இறுதி நாட்களில் நாள்தோறும் என்னோடு பேசினார். எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய்த் திகழ வேண்டும் என்ற மோசமான முடிவால் அவர் அடைந்த துன்பங்களை நான் அறிவேன். ஆனால் பிறரைப் பழிக்காத பேராண்மை அவரிடம் நிறைந்திருந்தது.
 
என்னை ஏவிஎம்மில் அறிமுகம் செய்தவர் அவர்தான். என்னை ஒரு பாடல் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்ததும் அவர்தான். பாட்டு வரிகளின் நுட்பம் கூறும் செப்பம் அவருக்கு வாய்த்திருந்தது.
 
கண்ணுக்குத் தெரியாமல் பல பேருக்கு உதவி செய்திருக்கிறார். ஒரு கொடையாளன் போய்விட்டான் என்று குமுறுகிறது நெஞ்சு.
 
அவர் உடல் மீது மலர் தூவ முடியாமல் கடல் தாண்டி நானிருக்கிறேன். என் துக்கம் சுமந்து என் பிள்ளைகள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.
 
போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன். உங்களை என்றும் மறக்காதவர்களின் சிறு கூட்டத்தில் ஒருவனாய் நானுமிருப்பேன்.
 
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.