1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2015 (16:54 IST)

பாண்டவர் அணியின் வெற்றிக்கு பின்னாலிருந்தவர் யார் தெரியுமா?

பாண்டவர் அணி வரலாறு காணாத வெற்றியை ருசித்திருக்கிறது. இந்த வெற்றிக்கு விஷால் உள்ளிட்ட இளம் நடிகர்களின் துடிப்பும், நாடக நடிகர்களை நேரடியாக சந்தித்து சோர்வில்லாமல் ஆதரவு திரட்டியதும், சரத்குமார் அணி மீதான நடிகர்களின் நம்பிக்கையின்மையுமே பிரதான காரணங்கள்.



 

இவற்றையெல்லாம்விட, பாண்டவர் அணியை ஒன்றிணைத்து வெற்றியை நோக்கி இட்டுச் சென்றவர் என ஒருவரை கைகாட்டுகிறார்கள். அவர், நடிகர் கமல்ஹாசன்.

கமல் ஏற்கனவே நடிகர் சங்கம் மீது அதிருப்தியில் இருந்தார். விஸ்வரூபப் பிரச்சனையில் சரத்குமார் நடிகர் சங்கம் சார்பாக வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல், ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தவே முயற்சி செய்தார். தமிழக அரசை எதிர்க்க அவரால் முடியாது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். அப்படியொரு ரகசிய பேரத்தை கமல் விரும்பவில்லை. அது அவருக்குள் கசப்பை ஏற்படுத்தியது.

அதற்கெல்லாம் முன்பே ராதாரவியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டிருந்தது. பல சந்தர்ப்பங்களில் கமலை ராதாரவி கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார். அவன் இவன் என்ற ஏக வசனத்திலேயே கமலை ராதாரவி விமர்சிப்பார்.

விஷால் தலைமையில் எதிர்ப்பு உருவானதும் அதனை ஒன்றிணைத்து வலுவான அணியாக மாற்றியதில் கமலின் பங்கு முக்கியமானது. சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக விஷால் அணி கையெழுத்து வேட்டை நடத்திய போது முதலில் கையெழுத்துப்போட்டு ஆதரவு தந்தவர் கமல். அதேபோல், பலரும் விஷால் அணிக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்க தயங்கிய போது வெளிப்படையாக ஆதரவு அளித்து அந்த தயக்கத்தை கமலே உடைத்தார்.

இப்படி பலகட்டங்களில் விஷால் அணிக்கு கமல் அளித்த உத்வேகமும், ஆதரவும் அந்த அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது என்கிறார்கள்.

ராஜா கையை வச்சா ராங்கா போகுமா என்ன.