வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (19:03 IST)

சென்னையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சிலை - முன்னின்று செய்யும் கங்கை அமரன்

சென்னையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சிலை வைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும், அதை நானே முன்னின்று செய்வேன் எனவும் கங்கை அமரன் தெரிவித்தார்.
 

 
மறைந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு அஞ்சலி கூட்டம், தமிழ்நாடு இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்தது.
 
இதற்கு முன்னிலை வகித்த இசை அமைப்பாளர் இளையராஜா, மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தை திறந்து வைத்து பேசினார்.
 
"இந்த சங்கம் உருவாக முக்கிய காரணமே எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அந்த காலத்தில் பாடல்களை மொத்தமாக வாசித்து முடித்து விட்டு, படம் வெளியாகி பல நாட்களுக்கு பிறகே இசை கலைஞர்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதிலும் சிலர் தங்களுடைய கமிஷனை எடுத்துக்கொண்டு கொடுப்பார்கள்.
 
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் முழு சம்பளம் கிடைக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் சாப்பிட மறந்து உழைப்பார். கவிஞர்களை ஊக்குவிப்பதில் அவர் முதல் ஆளாக இருந்தார். கவிஞர் கண்ணதாசனும், பாபநாசம் சிவனும் எனக்கு இரண்டு கண்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனது நெற்றிக்கண்ணை போன்றவர் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுவார்.
 
அவருடைய இசை என்னைப் போன்றவர்களுக்கும் வந்து சேர்ந்தது. சிறந்த இசை அமைப்பாளராக இருந்து அனைவரையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இசைமேதை எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால் அதை நானே செய்து விடுவேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து விட்டனர். அவருக்கு சென்னையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய இசை நமக்கு ஊக்க மருந்தாக இருக்கும்."
 
இந்த நிகழ்வில் பேசிய கங்கை அமரன், எம்.எஸ்.விக்கு சென்னையில் சிலை வைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. அதனை நானே முன் நின்று செய்வேன் என்றார்.