1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (07:38 IST)

’உளியின் ஓசை’ இயக்குனர் காலமானார்: முக ஸ்டாலின் இரங்கல்!

பிரபல எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான இளவேனில் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 70. இவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி கதை வசனத்தில் உருவான ’உளியின் ஓசை’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல நூல்களை இவர் எழுதியுள்ளார் என்பதும் அந்த நூல்கள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் இளவேனில் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பரும், கவிஞருமான இளவேனில் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இடதுசாரிச் சிந்தனைக்குச் சொந்தக்காரர். கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட உளியின் ஓசை திரைப்படத்தை இயக்கியவர். எழுத்தாளராக இருந்த இளவேனில் இயக்கிய முதல் படமும் இதுதான். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு, எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துள்ளார் என்று கவிஞர் இளவேனிலை மனதாரப் பாராட்டியதை இந்த நேரத்தில் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.
 
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம் என்ற இளவேனில் புத்தகத்திற்கு முத்தான முன்னுரை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இதயத்தில் அவருக்குத் தனி இடம் கொடுத்து வைத்திருந்தார். இலக்கிய உலகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.