விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள் காப்பாற்றினார்கள்… வாழை மேடையில் நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.
வெளியானது முதல் வாழை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது.
இந்நிலையில் படத்தின் 25 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “வாழை படத்தில் எங்களைக் காட்டவில்லை என சிலர் கோபித்துக் கொண்டார்கள். அந்த விபத்து நடந்த போது நான் அங்கு இல்லை. ஆனால் இதன் மூலம் அங்கிருந்தவரகளை இஸ்லாமிய மக்கள் காப்பாற்றினார்கள் என்ற உண்மை தெரிய வந்ததே போதும். அதை என்னைவிட விபத்தில் தப்பியவர்கள் சொல்கிறார்கள் என்பதே மிகப்பெரிய சந்தோசம். விபத்தில் சிக்கியவர்களை ஜாதி மதம் பார்க்காமல் காப்பாற்றிய அத்தனை பேரையும் இந்த மேடையில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.