மலையாள சினிமாவுக்கே இந்த நிலைமையா?... 2024 ஆம் ஆண்டில் இத்தனை கோடி நஷ்டமா?
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆனால் 2024 ஆம் ஆண்டு மலையாள சினிமாவுக்கே சுமார் 700 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என மலையாள தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் சுமார் 199 படங்கள் ரிலீஸ் ஆனதாகவும் அதில் சுமார் 26 படங்கள் மட்டுமே வெற்றிகரமான படங்களாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த படங்களும் சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு 350 கோடி ரூபாய் அளவுக்குதான் லாபமீட்டியதாக தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2024 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.