திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (17:49 IST)

கமல்ஹாசன் தலையிட வேண்டும்: செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா வேண்டுகோள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணமே இன்னும் தெரியாத நிலையில் கடந்த வாரம் திடீரென மதுமிதாவும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, விஜய் டிவி நிர்வாகத்திடம் சம்பள பணம் கேட்டு மிரட்டியதாக விஜய் டிவி தரப்பில் இருந்து காவல்துறையினர்களுக்கு புகார் வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் மதுமிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
 
நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். என் மீது விஜய் டிவி பொய் புகார் அளித்துள்ளது . எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய சம்பள தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்ததற்கு பின்னர் விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
 
இன்று வரை விஜய் டிவி வகுத்த வழிமுறைப்படியே நடந்து வருகிறேன். திரைத்துறையில் இருக்கும் என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. விஜய் டிவியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் தலையிட்டு இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மேலும் இதுவரை நான் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக் குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்” இவ்வாறு மதுமிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்