சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. முதல்முதலாக லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை!
இயக்குனர் லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமி 2014 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக இருந்த எண்ணி ஏழே நாள் என்ற படத்துக்காக பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றார்.
ஆனால் அந்த படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான பிவிபி தொடர்ந்த தங்கள் பணத்தைக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதற்காக லிங்குசாமி கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளன. இதையடுத்து செக் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என்ற தீர்ப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்புக் குறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அபளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.