வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (14:52 IST)

கெட்டாலும் நம்தலைவன் இப்போதும் ராஜனடா - லிங்கா படத்தின் பாடல்கள் முழு விவரம்

ரஜினி, மணிரத்னம் போன்றவர்களின் பட விவரங்களை முந்திக் கொண்டு உலகுக்கு அறிவிப்பவர் வைரமுத்து. லிங்காவில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் இரண்டு பாடல்களின் முழு விவரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இந்த ஐந்து பாடல்களையும் வைரமுத்துவும் அவரது மகன் மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர். ஐந்து பாடல்களின் விவரம் வருமாறு.
 
1. மோனா கசோலினா என்று தொடங்கும் பாடலை தொழில்நுட்ப கவிஞரான மதன் கார்க்கி எழுதியுள்ளார். மனோ, நீத்தி மோகன், தன்வி ஷா பாடியுள்ளனர்.
 
2. ஓ நண்பா என்று தொடங்கும் பாடலை வைரமுத்து எழுத எஸ்.பி.பி.யும் ஆர்யன் தினேஷும் பாடியுள்ளனர்.
 
3. உண்மை ஒருநாள் வெல்லும் எனத் தொடங்கும் பாடலை வைரமுத்து எழுத ஹரிச்சரண் பாடியுள்ளார்.
 
4. என் மன்னவா என்று தொடங்கும் பாடலை வைரமுத்து எழுத ஸ்ரீனிவாஸ், அதிதி பால் பாடியுள்ளனர்.
 
5. இந்தியனே வா பாடலை வைரமுத்து எழுத ரஹ்மான் பாடியுள்ளார்.
 
இதில் தான் எழுதிய மன்னவா மற்றும் உண்மை ஒருநாள் வெல்லும் பாடல்களின் முழு வரிகளையும் வைரமுத்து ட்டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பாடல் இங்கே...
 
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த 
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று 
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா 
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால் 
உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று 
நீயே வாழ்வில் வெல்வாய் 
கலங்காதே 
கலங்காதே 
கரையாதே 
 
ராமனும் அழுதான் 
தர்மனும் அழுதான் 
நீயோ அழவில்லை 
உனக்கோ அழிவில்லை 
ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு 
அடிகள் புதிதில்லை 
கலங்காதே 
கலங்காதே 
கரையாதே
 
சிரித்துவரும் சிங்கமுண்டு 
புன்னகைக்கும் புலிகளுண்டு 
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு 
பொன்னாடை போர்த்திவிட்டு 
உன்னாடை அவிழ்ப்பதுண்டு 
 
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு 
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் - அதன் 
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது 
சுட்டாலும் சங்கு நிறம் 
எப்போதும் வெள்ளையடா 
 
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே 
கெட்டாலும் நம்தலைவன் 
இப்போதும் ராஜனடா
 
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானேஸ 
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன் 
புன்னகையைக் கொள்ளையிட முடியாது.