1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:53 IST)

‘லிங்கா’ பட பிரச்சனை இன்று பேசி தீர்க்கப்பட்டுவிடும்: சரத்குமார்

‘லிங்கா’ பட பிரச்சனை மனிதாபிமான அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) பேசி தீர்க்கப்பட்டுவிடும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
ஏ.வெங்கடேஷ் டைரக்ஷனில் வெளிவந்த ‘சண்டமாருதம்’ படம் வெற்றிகரமாக ஓடுவதைத்தொடர்ந்து, அதில், கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
நான் இதுவரை 133 படங்களில் நடித்திருக்கிறேன். அதில், 100 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். ‘காஞ்சனா, பழசி ராஜா, கிறிஸ்டியன் பிரதர்ஸ், கன்னட மைனா’ ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தேன்.
 
மீண்டும் முழுமையான கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவேண்டுமென்று என் நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து, ‘சண்டமாருதம்’ படம் உருவானது. இந்த படம் எதிர்பார்த்ததைவிட, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்த படத்துக்காக இரண்டு வேடங்களில் நடிப்பதற்கு நான் கடுமையாக உழைத்தேன். உச்சக்கட்ட சண்டைக் காட்சி அனைவராலும் பேசப்பட்டது.
 
ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ பட பிரச்சனை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஒரு தொழில் என்று எடுத்துக்கொண்டால் லாபமும் வரும், நஷ்டமும் வரும். லாபம் வரும்போது திருப்பிக் கொடுக்காதவர்கள், நஷ்டஈடு மட்டும் கேட்பது தொழில் தர்மம் ஆகாது என்று குறிப்பிட்டிருந்தோம்.
 
இந்த பிரச்சனையில் மனிதாபிமான அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையை வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடாக கொடுத்து சுமுகமாக பேசி முடித்துவிடலாம் என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசிடம், ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, நானும், ராக்லைன் வெங்கடேசும் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ‘லிங்கா’ பட பிரச்சனை தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று (வியாழக்கிழமை) இந்த பிரச்சனை சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.
 
இனி வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்கவேண்டும். படத்தை வாங்கியவர்கள் நஷ்டஈடு கேட்கக்கூடாது என்று ஒரு முடிவு எடுக்கவேண்டும். இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படம் தொடர்பான அனைத்து சங்கத்தினருடனும் பேசி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
 
இவ்வாறு சரத்குமார் கூறினார்.