மீம்ஸ் போட்ட மீடியா எங்கே? – லீனா மணிமேகலை கோபம்

Last Modified வியாழன், 25 அக்டோபர் 2018 (16:41 IST)
லீனா மணிமேகலைக்கு ஆதரவாக நடிகை அமலா பால் நேற்று இயக்குனர் சுசி கணேசனுக்கு மீது பாலியல் அத்துமீறல் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறினார். அந்த புகாரில் 13 வருடங்களுக்கு முன்பு சுசி கணேசன் ஒரு நேர்காணலுக்குப் பின்பு அவரது காரில் வைத்து தன்னிடம் அத்துமீற முயன்றதாகவும், தன்னிடம் இருந்த கத்தியைக் காட்டி அவரிடம் இருந்து தப்பித்தாகவும் கூறினார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த இயக்குனர் சுசி கணேசன் லீனா மீது மான நஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளார். பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட லீனாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். லீனா- பத்திரிக்கையாளர்கள் உரையாடலின் போது சிலக் கேள்விகளுக்கு கடுமையாக பதிலளித்த லீனாவை சமூக வலைதளங்களில் கேலி செய்வது போன்ற மீம்ஸ்கள் உலாவின.

இதனையடுத்து தற்போது நடிகை அமலாபால் இந்த விவகாரத்தில் லீனாவுக்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார். இயக்குனர் சுசி கணேசன், திருட்டுப்பயலே 2-ல் படத்தில் நடித்த போது தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் வேண்டுமென்றே உரசியதாகவும் தெரிவித்துள்ளார்.


அமலாபாலின் இந்தப் புகாரை மேற்கோள் காட்டி லீனா தன்னிடம் அத்துமீறிக் கேள்விகேட்ட ஊடகங்களை நோக்கி காட்டமான எதிர்வினை ஆற்றியிருக்கிறார். தனது டிவிட்டரில் ‘வரிஞ்சிக் கட்டிட்டு சுசி கணேசனுக்கு வக்காலத்து வாங்கி,துரத்தி துரத்தி என்னை கேள்வி கேட்டு, வசை பாடி, மீம்ஸ் போட்ட மீடியா எல்லாம் எங்க போனீங்க? அமலாபாலுடைய குற்றச்சாட்டுக்கு சுசி கணேசனோட பதில் என்னன்னு கேட்கிற துப்பில்லையா? அமலாபாலை மிரட்டினதுல நீங்களும் மிரண்டுட்டீங்களா?’ என வினவியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :