தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை… குஷ்புவின் பொறுப்பற்ற கருத்து – நெட்டிசன்ஸ் கலாய்!
திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்தால் மட்டுமே டிக்கெட் விலையை உரிய கட்டணத்தில் வழங்க இயலும் என்றும், திரையரங்குகளும் நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என்றும் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
இதுகுறித்து நடிகர் விஜய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய நிலையில் தற்போது திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அமர வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பட வெளியீட்டிற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த அறிவிப்பு திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மேலும் கொரோனா பரவ ஒரு வாய்ப்பாக அமையுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளதால் இந்த முடிவு தவறானது என சமூகவலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் குஷ்பு இந்த முடிவுக்கு மாற்றுக் கருத்து உள்ளவர்கள் திரையரங்குகளுக்கு வர வேண்டாம். உங்கள் பயம் புரிகிறது. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறியிருந்தார். தியேட்டருக்கு சென்று வந்தவர்கள் மூலமாக கொரோனா பரவுமே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என குஷ்புவை நோக்கி பலரும் எதிர் விமர்சனம் வைத்துள்ளனர்.