எஞ்சினியர், டாக்டர் போல் பெயருக்கு பின்னால் விவசாயி என்று போட்டுக்கொள்ளும் நடிகர்
எஞ்சினியர், டாக்டர் மற்றும் பட்டதாரிகள் அவர்களுடைய பெயருக்கு பின்னால் அவர்களுடைய கல்வித்தகுதியை பெருமையாக போட்டுக்கொள்வது போல் நடிகர் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் விவசாயி என்று பெருமையாக போட்டுக்கொண்டுள்ளதாகவும், இந்த படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் படமாக இருக்கும் என்றும் இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த படம் குறித்து கூறியதாவது: இந்த படத்தில் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் IT வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார். படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார்.
வெயில் , பனி , மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளார். சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த டைட்டிலாம். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.