கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’!
பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களின் இதயங்களைக் கவர ஒரு சில நடிகர்களால் மட்டுமே முடியும். அதில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் ஒருவர்.
பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரது கன்னட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் அவரது திரை இருப்பு மற்றும் ஸ்டைலான ஸ்வாக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நடிகர் சிவராஜ்குமார் 'ஜாவா படத்தின் மூலம் தமிழில் நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கன்னடத் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது, நடிகர் சிவராஜ்குமாருடன் ஜாவா படத்திற்காக இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த ஈட்டி மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஐங்கரன்'ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர் ரவி அரசு கூறுகையில், “உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சிவராஜ்குமார் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்குவது எனக்கு கிடைத்த பெருமை. இது ஒரு அவுட்-அண்ட்-அவுட் ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாக்குகிறோம். அவரது ரசிகர்களை 100% திருப்திப்படுத்தும். அதே நேரத்தில், தமிழ் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை ஈர்க்கும். செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் 'ஜாவா' என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான கிளிம்ப்ஸ் காட்சியை படமாக்க உள்ளோம்" என்றார்.
மேலும், "இந்த திரைப்படத்தில் 'ஜாவா' பைக்கிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இப்போதைக்கு அதுமட்டும்தான் என்னால் சொல்ல முடியும்" என்றார்.
படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றி கூறும்போது, நடிகர் சிவராஜ்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.