சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் ஆர்வமா? – கங்கனா ரனாவத் விளக்கம்!
சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைக்கு உள்ளான கங்கனா ரனாவத் அரசியலில் ஈடுபடுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் தமிழ், இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மராட்டிய சிவசேனா கட்சியினருக்கும் கங்கனாவுக்கு ஏற்பட்ட வார்த்தை மோதலை தொடர்ந்து அவருக்கு அரசு பாதுகாப்பும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் பேசி வருவதால் கங்கனா அரசியலில் ஈடுபட உள்ளாரா என்பது போன்ற பேச்சுகளும் எழுந்தன.
இந்நிலையில் சமீபத்தில் தலைவி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கங்கனா ரனாவத் “நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் நான் சுதந்திரமான ஒரு பெண்ணாக என்னுடைய கருத்தை தெரிவித்துள்ளேன். இதையெல்லாம் வைத்து எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாக பேசுகிறார்கள், எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எப்போதும் இல்லை” என கூறியுள்ளார்.