முன்பகையை மறந்து ஒரே மேடையில் கமல்ஹாசன் & தாணு!
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த படம் பற்றி பிரபல பத்திரிக்கையில் எழுதிய தாணு “ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்” எனக் கூறியிருந்தார். இதன் காரணமாக இருவரும் அதன்பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது கூட இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவரான டி ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அந்த விழா ஏற்பாட்டாளர்களில் கலைப்புலி தாணுவும் ஒருவர். இந்த விழா மேடையில் தாணுவும் கமல்ஹாசனும் ஒன்றாக அமர்ந்திருந்து பார்த்து சிரித்து பேசிக் கொண்டனர். இது சம்மந்தமான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.