வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (13:27 IST)

ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்?

ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. இயக்குநர் கண்மணி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியிருக்கின்றன. இதில் கவிஞர் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு புகட்டுகிற நோக்கமில்லை நேக்கு” என்று தொடங்குகிறது படத்தின் புரோமோ சாங். இப்பாடலின் வரும் “வேப்பமரம் சாஞ்சாலும் வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்ற வரியில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் (வெளக்கமாரு) இடம்பெறுகிறது.


 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது. ஆனால் அக்கட்சியின் பெரும்பாலான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கின. இந்த நிலையில் “வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்று கபிலன் எழுதியிருப்பது அரசியல் நையாண்டியாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து கபிலன்வைரமுத்து அளித்திருக்கும் விளக்கத்தில் “பேய்களை வெளக்கமாரு கொண்டு ஓட்டினாலும் அவை மறுபடியும் வரலாம் என்று படத்திற்கு பயன்படும் ஃபேண்டஸி அர்த்தத்தில்தான் நான் எழுதியிருக்கிறேன். இதைப் பாடலாக எடுத்துக்கொள்வதும் அரசியலாக கருதுவதும் அவரவர் பார்வையைப் பொருத்தது” என்று பதிலளித்திருக்கிறார்.