திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு உயரிய விருது வழங்கி உலக கலைஞானியாக கௌரவித்த அமெரிக்காவில் உள்ள தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி.
தமிழ்த்திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்-இயக்குனர் திரு பாக்யராஜுக்கு ஒரு பெருமைக்குரிய மணிமகுடம் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயலாற்றிவரும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, பாக்யராஜுக்கு, 'உலக கலைஞானி' விருது வழங்கி கௌரவித்துள்ளது, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'தமிழன் எங்கும் வெற்றிபெறுவான்' என்கிற கூற்றுக்கேற்ப, நடிகர்-இயக்குனர் திரு பாக்யராஜ் அவர்கள், அமெரிக்காவில் இருந்து ஒரு விருது வாங்கியுள்ளது, தமிழ்சமூகத்திடமிருந்தும், தமிழ்த் திரையுலகிலிருந்தும், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலக தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் சிறப்பாக இணைத்துக்கொண்டிருக்கிற தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, தனது பயணத்தில், தமிழ் ஆளுமைகளை சிறப்பிக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், சமீபத்தில் மாபெரும் விருது விழா ஒன்றை நடத்தியிருக்கிறது.
இந்த மாபெரும் விருது விழா மூலம் பல்வேறு தமிழ் ஆளுமைகளை, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கௌரவித்திருக்கிறது. உலக தமிழ்ச்சமூகத்தில் ஒரு முக்கிய இணைய ஊடகமாக செயல்பட்டு வரும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, இவ்விருது விழாவை இணைய வழியாக மிகச்சிறப்பாக நடந்திருக்கிறது.
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில், நமது பெருமைக்குரிய தமிழ் நடிகர்- இயக்குனர் திரு பாக்யராஜ் அவர்களுக்கு 'உலக கலைஞானி' விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விருதை, திரு பாக்யராஜ் அவர்களுக்கு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசரும் தமிழறிஞருமான திரு கற்பக விநாயகம் அவர்கள் வழங்கினார்கள். சிறப்புக்குரிய இந்த விருதை ஏற்றுக்கொண்ட திரு. பாக்யராஜ் அவர்கள், 'எனக்கு கிடைத்த மற்ற விருதுகளை விட, புலம் பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் மூலமாக அமெரிக்காவிலிருந்து கிடைத்த இந்த விருது எனக்கு பெருமையளிப்பதாக உள்ளது' என தெரிவித்தார்.
தொடர்ந்து, திரு பாக்யராஜ் பேசுகையில், "தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி மூலமாக ஒரு சிறப்பான விருதை எனக்கு வழங்கிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கங்கள். இந்த விருது யாரால் எனக்கு கொடுக்கப்படுகின்றது என நினைக்கும்பொழுது, மிகவும் பெருமையாக, நெகிழ்வாக இருக்கிறது. இன்று, எம்ஜியாரால் பாராட்டப்பட்டு, ஒரு பெயரும் புகழும் வாங்கிய நீதியரசர் அவர்கள் எனக்கு விருது வழங்குகிறார் என நினைக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் மூலமாக இந்த விருதை தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கியிருக்கிறது நெகிழிச்சியாக உள்ளது" என தெரிவித்தார்.
விருது விழாவில் சிறப்புரையாற்றிய நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தங்களது வேலையை தாண்டி, தமிழுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில், தங்களது நேரத்தையும், காலத்தையும் ஒதுக்கி செய்துகொண்டிருக்கின்ற பணி பெருமைக்குரியது. தமிழகத்தில் இருப்பவர்களை விட, அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இருப்பதை பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், "எம்ஜிஆர் அவர்கள் திரு பாக்யராஜை 'கலை வாரிசு' என அறிவித்தார். ஆனால், கலை வாரிசு என்கிற பட்டத்தை விட, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி கொடுத்திருக்கிற பட்டம் இருக்கிறதே, அது மிகச் சிறந்த பட்டம். பாக்யராஜ் என்றைக்குமே மறக்க முடியாத பட்டம். நாம் ஓய்வு பெற்றாலும், நம்மை மற்றவர்கள் நினைவுகூரவேண்டும். அந்த ஞானம் தான் முக்கியம்.
அந்த வகையில், திரு பாக்யராஜ் அவர்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய விருது முக்கியமானது. இசைஞானி, உலக நாயகன் போன்ற பட்டங்கள் சிறப்புவாய்ந்தது. அதை எல்லாம் விட மிகச் சிறப்பான 'உலக கலைஞானி' என்கிற பட்டம் திரு பாக்யராஜ் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இப்பட்டதிற்கு பாக்யராஜ் மிகப்பொருத்தமானவர்", என நீதியரசர் திரு கற்பக விநாயகம் குறிப்பிட்டார்.
நடிகர்- இயக்குனர் பாக்யராஜை தொடர்ந்து, பல்வேறு ஆளுமைகளும் இவ்விருது விழாவில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். விருது பெற்ற பல ஆளுமைகளும், தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி தங்களுக்கு ஒரு மிகப்பெரிய தளத்தை வழங்கி தங்களைப் பாராட்டியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள். இவ்விழாவில், பல்வேறு நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற தமிழ் ஆளுமைகள் கலைச் செம்மல் விருது, கலைமாமணி விருது, சிந்தனைச் சிற்பி விருது, முத்தமிழ் மாமணி விருது, கலைத்திலகம் விருது, மற்றும் தமிழ் மாமணி விருது போன்ற சிறப்புவாய்ந்த விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பேசிய தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் நிறுவனர் திரு ஆஸ்டின் கில்டஸ் கூறுகையில், "இது ஒரு விருது விழா என்பதைத் தாண்டி, இது ஒரு நன்றி அறிவித்தல் விழா. தமிழுக்காக தன்னார்வமாக சேவை செய்கிற இந்த சேவையாளர்களை, இந்த நல்ல இதயங்களை அங்கீகரிக்கவேண்டும், நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாபெரும் விருது வழங்கும் விழா.
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி இயக்குனர்- நடிகர் திரு பாக்கியராஜ் அவர்களுக்கு 'உலக கலைஞானி' விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் போகும் நாடுகளில் வேலை மட்டும் செய்வதில்லை. அவர்கள் அங்கு வாழ்கிறார்கள். தமிழ் அவர்களின் வாழ்விற்கு அடையாளமாகிறது. ஆகையால், அவர்கள் அங்கு தமிழ்ச் சங்கங்களை, பள்ளிகளை நிறுவுகிறார்கள், அங்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்”.
மேலும் அவர் பேசுகையில், “அந்த சங்கத்தினுடைய நிகழ்ச்சிகளை, அந்த சங்கத்தின் உறுப்பினர்களின் திறமைகளை உலகிற்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவில் துவங்கப்பட்டது தான் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி. தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள சங்கங்களை இணைத்த தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி இன்று எல்லைகள் கடந்து, பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இணைத்துக்கொண்டிருக்கிறது. நீங்களும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் இணைந்து இதை ஒரு ஊடக இயக்கமாக, தமிழ்த் திறமைகளை இணைக்கின்ற ஒரு இயக்கமாக செயல்படுவோம்”, எனத் தெரிவித்தார்.
சமீபத்தில், பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, தமிழுக்கு சேவையாற்றி கொண்டிருக்கும் ஆளுமைகளுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்திருப்பது பல தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, தொடக்கம் முதலே, தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாதுகாக்க, மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்றி, இன்று உலகளாவிய தமிழ்ச்சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளிலும், பல்வேறு மொழியமைப்புகளிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களை, தமிழ் அமைப்புகளை மற்றும் தமிழ்ப் பள்ளிகளை இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாக தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி திகழ்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் தொடங்கப்பட்ட தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, தமிழ் ஆளுமைகளுடன் இணையவழி நேர்காணல்கள், பாலகர் பட்டிமன்றம், தமிழ் திருவிழாக்கள் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளையும், சமூக மேம்பாடு, இலக்கியம், ஆரோக்கியம், மொழி, சுற்றுச்சூழல் போன்ற வாழ்வியல் சார்ந்த தளங்களிலும் சமூக ஆர்வலர்களை, இளைய ஆளுமைகளை கண்டெடுத்து அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, அவர்களைப் போல பல ஆளுமைகளையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது.
Source and Credits : Tamil America TV