செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (10:16 IST)

எனக்கு வீட்டில் முழு சப்போர்ட்டாக இருந்ததே சிவகுமார் அப்பாதான்… ஜோதிகா பதில்!

திருமணத்துக்குப் பின் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ஜோதிகா  36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அதையடுத்து வரிசையாக அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அந்த படங்களை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

கடைசியாக தமிழில் அவர் பெரிதாக எந்த படங்களும் நடிக்கவில்லை. மலையாளத்தில் அவர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்திருந்த காதல் திரைப்படம் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இப்போது மும்பையில் குடியேறியுள்ள ஜோதிகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் “நடிக்கக் கூடாது என என் மாமனார் சிவகுமார் தடுத்தாரா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதை நான் கிளியர் பண்ணியே ஆகவேண்டும். எனக்கு வீட்டில் ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே சிவகுமார் அப்பாதான். திருமணமாகி 15 ஆண்டுகள் சென்னையில்தான் இருந்தேன். ஆனால் கோவிட் காலத்தில் என் பெற்றோர் உடல்நிலை மிக மோசமானதால் அவர்களைக் கவனித்துக்கொள்ள அடிக்கடி சென்று வர முடியாது என்பதால் இப்போது மும்பைக்கு குடியேறியுள்ளோம். ஆனால் இது தற்காலிகமானதுதான். விரைவில் சென்னைக்கு திரும்பிவிடுவோம்” எனக் கூறியுள்ளார்.