கபாலி தலித் சினிமாவா?: இயக்குனர் ரஞ்சித் ஒப்பன் டாக்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படம் குறித்து நேர்மறை, எதிர்மறை என கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அந்த படத்தின் வசூலை இவை பாதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் ரஞ்சித் தலித் சமுதாயத்தின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் பற்றி தன்னுடைய கோபத்தை ரஜினி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என விமர்சிக்கப்பட்டது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கபாலி படத்திற்கு இப்படியான விமர்சனங்கள் வரும் என்று எனக்குத் தெரியும். படம் பாட்ஷா மாதிரி இருக்கும் என எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் படம் வழக்கமான ரஜினி படம் மாதிரி இருக்காது என ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன்.
ஒரு கேங்க்ஸ்டர், தன்னுடைய மனைவியை தேடி அலையும் உணர்ச்சிகரமான கதைதான் கபாலி. இந்த படத்தின் மூலம் தலித் சமுதாயம் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தற்போது விவாதத்திற்கு வந்துள்ளது.
சமூகத்தின் மீது எனக்கு இருக்கும் அக்கறைதான் இந்த படம். படத்தில் நகைச்சுவை இல்லை என்கிறார்கள். இந்த படத்திற்கு நகைச்சுவை தேவையில்லை, அது படத்தின் தன்மையை பாதிக்கும் என்றார்.
எல்லா தரப்பு மக்களுக்கானது இந்த படம். பலர் நல்ல விமர்சனங்களை கூறி வருகின்றனர். வசூலை பொறுத்தவரை இப்படம் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, ரஜினியின் நடிப்பில் மற்றொரு பரிமாணத்தை நீங்கள் பார்க்கலாம். அதைத்தான் இந்த படத்திலும் நான் காட்ட நினைத்தேன். முள்ளும் மலரும் படத்தில் என்னை பாதித்த காளி கதாபாத்திரத்திரம் போலத்தான் கபாலியையும் காட்ட முயன்றேன் என்றார் ரஞ்சித்.