1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 7 மே 2016 (16:16 IST)

இளையராஜா பெரிய மகான்; மகான் மற்றவர் மனதை புண்படுத்த கூடாது - கங்கை அமரன் காட்டம்

இளையராஜா என்பவர் பெரிய மகான். ஒரு பெரிய மகான் என்பவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் கூறியுள்ளார்.
 

 
இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
 
ஆனாலும் தேசிய விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2010ம் ஆண்டு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினையும் அவர் பெற்றுகொள்ளவில்லை.
 
பின்னனி இசை நன்றாக செய்பவர்களுக்கு பாடல்களை போட தெரியாதா? பின்னணி இசை, பாடல்களுக்கு என்று விருதினை தனியாக கொடுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தினை முன்பே கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள கங்கை அமரன், “இளையராஜா விருதைப் புறக்கணித்ததற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். நாம் வெறும் ஆடியன்ஸ்தான். அவரே சொல்கிறார் பின்னணி இசை மற்றும் பாடல்கள் என ஒரே விருதாக கொடுக்க வேண்டும் என்று. ஆஸ்கர் விருதில் அப்படி கிடையாது. இரண்டு பேருக்கு விருது கொடுப்பதில் அவருக்கு என்ன நஷ்டம்?
 
இப்போது யார் பின்னணி இசை பண்ணுகிறார்கள். ஆளுக்கு ஆள் ஒவ்வொரு இசை பண்ணிக் கொடுக்கிறார்கள், அது இசையமைப்பாளர் பெயரில் வருகிறது. ஒரே ஒரு ஆள் பின்னணி இசை அமைக்கிறார் என்றால் அது இளையராஜா மட்டும் தான். பாடல்கள் நன்றாக இருந்தால் கொடுக்கப் போகிறோம், நன்றாக இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
தேசிய விருதைப் போல இந்தியாவில் பெரிய விருது எதுவும் இருக்கிறதா? இந்தியாவில் பெரிய விருது என்றால் இது ஒன்று தான். முதலிலேயே எனக்கு விருது வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருந்தால் நாங்கள் படம் பார்க்கும் போது இவர் வாங்க வரமாட்டார் என்று விட்டுருப்போம்.
 
இளையராஜாவை மீறிய இசையமைப்பாளர் என்று இந்தியாவில் யாரும் கிடையாது என்பது உண்மையான விஷயம். இந்தியாவின் பெரிய விருதை அவர் வந்து வாங்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களான எங்களுக்கு பெரிய வருத்தம்.
 
தமிழகத்தில் இருந்து ஒருவர் சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்குவது தமிழனுக்கு பெருமை. என் பாட்டை மட்டும் கேளுங்கள் நான் விருது வாங்கமாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம். இது தான் இந்தியாவிற்கு கொடுக்கும் மரியாதையா? ஜனாதிபதி வந்து விருது கொடுக்கும் விழாவில் அமிதாப் உள்ளிட்ட அனைவருமே வந்து விருது வாங்கினார்களே. அமிதாப் வாங்காத விருதா?
 
விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பவதாரணி, யுவன் யாரையாவது விட்டு வாங்கியிருக்கலாம். இந்திய விருது எனக்கு வேண்டாம், ஆஸ்கர் விருது மட்டுமே வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே.
 
இளையராஜா என்பவர் பெரிய மகான். ஒரு பெரிய மகான் என்பவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். இசைக்காகவே வாழ்கிறேன் என்று சொல்லிவிட்டு, இந்தியாவில் இருந்து கொடுக்கும் விருதை வேண்டாம் என்று சொல்வது ஏன் எனப் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.